S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

காரைக்கால், அக். 16:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணியளவில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான இரண்டு ஹோவர்கிராஃப்ட் ரோந்துக் கப்பல்கள் வந்தடைந்தன. இந்தக் கப்பல்களைக் காண கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, இந்திய கடலோர காவல் படைக்காக கோவாவில் உள்ள கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்ட H561, H562 ஆகிய இரண்டு ஹோவர்கிராஃப்ட் ரோந்துக் கப்பல்கள், மேற்குவங்க மாநிலத்துக்குச் செல்லும் வழியில் ஓய்வெடுப்பதற்காக காரைக்கால் கடற்கரைக்கு வந்திருப்பது தெரியவந்தது.

இந்த இரண்டு கப்பல்களிலும் தலா 15 வீரர்கள் என மொத்தம் 30 வீரர்கள் பயணம் செய்து வருகின்றனர். இன்று காரைக்காலில் தங்கும் வீரர்கள், கப்பல்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் எரிபொருளை நிரப்பிக்கொண்டு ஓய்வெடுக்க உள்ளனர்.

இதையடுத்து, நாளை (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் காரைக்காலில் இருந்து புறப்படும் இந்த இரண்டு ஹோவர்கிராஃப்ட் ரோந்துக் கப்பல்களும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹல்தியா பகுதியில் இயக்கப்பட உள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *