ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேச்சு
கோவில்பட்டி,ஆதித்தமிழர் கட்சி சார்பில், திராவிடத்தின் எழுச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சமூக நீதி பயணம் கன்னியாகுமரியில் கடந்த 21ம் தேதி துவங்கியது.
இந்த பயணம் கோவில்பட்டி வந்தடைந்தது. கோவில்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். தென்மண்டல ஊடகப் பிரிவு செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
கழுகுமலை குமரேசன் பகுதியில் தொடங்கி மந்திதோப்பு கிராமம், கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகர், ஸ்டாலின் காலனி, கரிசல்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதித்தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ஜக்கையன் திறந்த வேனில் பேசுகையில்: மனிதர்களை ஏற் றத்தாழ்வு இல்லாமல் சமமாக பார்ப்பதுதான் திராவிடம். திமுக., ஆட்சி மீண்டும் வந்தால் தான் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாகவும், சுயமரியாதையாகவும் இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் தான். 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், ஆதித்தமிழர் கட்சி மாநில, மண்டல, வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.