கடலூர் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது
நேற்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆட்டோ வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் ஒட்டியும், கையெழுத்து இயக்கம் மற்றும் கலைப்பயண நிகழ்ச்சியினை தொடங்கிவைத்தும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்து அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1-ம் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.ட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மையக்கருத்தினை வெளியிட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் இவ்வாண்டின் மையக்கருத்தாக “இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்” என்ற கருத்தினை வெளியிட்டுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றின் பரவலானது இந்திய அளவில் 0.21 சதவீகிதமும், தமிழ்நாடு 0.18 சதவீகிதமும் கடலூர் மாவட்டம் 0.22 சதவிகிதமும் உள்ளது. எனவே, நமது மாவட்டத்தில் எச்.ஐ.வி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 கலைக்குழுக்கள் மூலம் கிராமப்பகுதிகளில் 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு நிகழ்ச்சிகள் வீதம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் கீழ் 24 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும், 80 எளிதாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் செயல்படுகிறது. இவை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்ட அளவிலான மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ம) துணை ஆரம்ப நிலையங்களிலும் செயல்படுகிறது. மேலும் நமது மாவட்டத்தில் 3 ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள்,24 பால்வினை சிகிச்சை மையங்கள், 7 இணைப்பு ஏ.ஆர்.டி. கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள், 5 அரசு இரத்த மையங்கள், 2 தனியார் இரத்த மையம், 2 இலக்கு மக்களுக்கான திட்டம், 1 இளைப்பாறும் மையம், 1 டான்சாக்ஸ் சிஎஸ்சி திட்டம் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறது.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் மூலம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, உழவர் பாதுகாப்புத் திட்டம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த 6,055 நபர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறது.
எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனையை தன்னர்வமாக பொதுமக்களுக்கு செய்துகொள்வதன் மூலம் நாம் நமது சமுதாயத்தை எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் தொடர் சிகிச்சையான ஏ.ஆர்.டி கூட்டு மருந்தை உட்கொள்வதாலும், ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் தங்களது வாழ்நாட்களை நீட்டித்துக்கொள்வதோடு தங்களது குழந்தைகளை பாதுகாக்கவும், தங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். மேலும் எச்.ஐ.வி தொற்றுள்ள நபர்களை சமுதாயத்தில் பாகுபாடின்றி சமமாக கருத வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.நடராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மேற்பார்வையாளர் கதிரவன், நிலைய மருத்துவ அலுவலர் கவிதா,ஏ.ஆர்.டி முதுநிலை மருத்துவர் மரு.தேவ்ஆனந்த், மாவட்ட எச்.ஐ.வி உள்ளோர் சங்கம் தலைவர் ராஜேஸ்வரி, ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.