மேற்கு வங்காள மாநிலத்தில் 63 ஆயிரத்து 239 உள்ளாட்சி பதவிகளுக்கான பஞ்சாயத்து தேர்தல் இன்று(8-ந்தேதி) ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டதால் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து அரசியல் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கடந்த 1 மாதமாக அங்கு நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 18 வயது சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணிக்கு மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக 65 ஆயிரம் மத்திய படை போலீசாரும், 70 ஆயிரம் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட திரண்டனர். பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். ஒட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் மழையையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அதே சமயம் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீ வைப்பு, வாக்குச்சாவடிகள் சூறை, துப்பாக்கி சூடு என வன்முறைகளும் வெடித்தது. கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்குள்ள ஓட்டுச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குப்பெட்டிக்கு தீ வைத்தது. ஓட்டு சீட்டுகளையும் கிழித்தெறிந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர். சிடாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்தது. ஓட்டு பெட்டிகளையும் உடைத்தது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்த மேஜை, நாற்காலிகளை அக்கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் தீயும் வைத்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. முர்ஷிதாபாத் மாவட்டம் ஷாம் ஹெர்சந்த் என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வீடு சூறையாடப்பட்டது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு நேற்று இரவே பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தலை விரித்தாடியது. இந்த வன்முறையில் முர்ஷிதாபாத் மாவட்டம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள கபாஸ் தங்கா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபர் அலி என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்படும் வழியில் இறந்தார். ரெஜிநகர் பகுதியில் அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தொண்டர் குண்டு வீசி கொல்லப்பட்டார். கார்கிராம் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கூச்பெகார் மாவட்டம் ராம்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி சேர்மன் கணேஷ்சர்கார் என்பவர் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த வன்முறைக்கு மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் பலியானார். பாலிமாரி வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பாரதிய ஜனதா பூத் ஏஜெண்டு மாதவ் விஷ்வாஸ் என்பவரை வெடிகுண்டு வீசி கொன்றது. இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரசார் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. 24 பாராகான்ஸ் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு பூத் ஏஜெண்டாக செயல்பட்ட அப்துல்லா என்பவர் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் வேட்பாளரின் கணவர் இருப்பதாக கூறி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமாக இருந்தது. நேற்று இரவு முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் வன்முறை சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேர் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தலா 3 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளரும் இறந்தார். இதனால் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்து உள்ளது. இந்த சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர். கூச்பெகார் மாவட்டம் ஒக்ராபாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் ஹபிசூர் ரகு மான் என்பவர் காயம் அடைந்தார். நாடியா மாவட்டம் காசானாகிராம் பஞ்சாயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாரதிய ஜனதா நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாராயண்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹசினா சுல்தானா என்பவரது கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. தெற்கு பர்கானாஸ் பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிகிறது. அதன் பிறகு ஓட்டு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 2-ம் இடத்தை பிடித்தது. இம்முறை எந்த கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பது 11-ந்தேதி தெரியவரும். இந்த தேர்தல் முடிவு சட்டசபை தேர்தல் முடிவை போல இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *