கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் கூட்டு தணிக்கை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கடலூர்,பண்ருட்டி,நெய்வேலி பகுதிகளை சேர்ந்த உள்ள 86 பள்ளிகளில் 280 வாகனங்கள் உள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டு தணிக்கைக்கு 187 வாகனங்கள் உட்படுத்தப்பட்டது இவ்வாகனங்களில் அவசரவழி கதவு, முன்,பின் சென்சார் கேமரா, மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்ட 17 அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வாகனங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்துக்குள் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தணிக்கைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று தணிக்கைக்கு வர இயலாத வாகனங்களை உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தணிக்கைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டும் என பள்ளி தாளாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு துறை மூலம் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும், மருத்துவ துறை மூலம் விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இவ்ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர்
அபிநயா , வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, உதவி மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை) விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.