பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி என பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணன் பேட்டி
இந்த ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில், பாய்மர படகு விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.
22 வயது நிரம்பிய நேத்ரா ஆசிய விளையாட்டு போட்டிகள், ஆசிய பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் என அடுத்தடுத்து முயற்சிக்கு பிறகு, பிரான்சில் நடைபெற்று முடிந்த விளையாட்டு தொடரில் 67 புள்ளிகளுடன் 5 ஆவது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.
நேத்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரான்சில் இருந்து சென்னை வந்தடைந்த நேத்ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர், பயிற்சியாளர்கள், பாய்மர படகு விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது…
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நேத்ரா குமணன் பேசியதாவது,
இது எனது இரண்டாவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்… கடைசி முறை எனக்கு சில வாய்ப்புகள் கிடைத்ததை பயன்படுத்திக் கொண்டேன். பிரான்ஸ் போட்டியில் முதல் 10 இடங்களை பிடிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்தேன். அதனை செய்து முடித்ததால் இரண்டாவது முறையாக நமது நாட்டிற்காக பாய்மர படகு போட்டியில் களம் கான உள்ளேன்..
தமிழ்நாடு பாய்மர படகு கழகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் எனது பெற்றோர், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு தரப்பில் இருந்து எனது பயிற்சிக்கான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்து கொடுத்தனர். இந்தியாவும் பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி…
தந்தை குமணன்:
கடந்த சில வருடங்களாக அரசு தரப்பில் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது… பிரதமர் நேத்ராவுக்கு கடிதம் எழுதி ஊக்குவித்து இருந்தார். 2012 முதல் தேசிய அளவிலான பதக்கம் பெற்றதில் இருந்தே அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளில் ஆசிய போட்டிகள், ஆசிய பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார்.
சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சி காரணமாக நாட்டை விட்டு இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது ஆனால் நாங்கள் அதனை பொருட்படுத்தவில்லை… படிப்பிலும், விளையாட்டிலும் சமமான பங்களிப்பை கொடுத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார்…