இன்னும் இருக்கின்றேன்!

நூல் ஆசிரியர் : கவிஞர் ஞானபாரதி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு : இளங்குயில்கள்,
30, மதுரைச் சாலை, ஆண்டிப்பட்டி-625 512. தேனி மாவட்டம். பக்கம் : 64, விலை : ரூ. 30.

**

  நூல் ஆசிரியர் கவிஞர் ஞானபாரதி அவர்கள் இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர். இளங்குயில் என்ற மாத இதழை நடத்தி வருபவர்.  ஆண்டிபட்டியின் பெருமைகளில் ஒன்றானவர்.  தோழர் சி. மகேந்திரன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரின் அணிந்துரை மிக நன்று.  ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி மனிதாபிமானத்துடன் சிந்தித்து கவிதைகள் அடித்துள்ளார், பாராட்டுக்கள். 

  வானந்திர பூதங்களின்

  அசுரப் பற்களில்
  வழியும் இரத்தத்துளிகளில்

  கருக் கொள்கிறது
  காலத்தின் வன்மத்தைத் துடைத்து
  ஞாலத்தின் தொன்மத்தைச் சுமந்து
  பறக்கும் வண்ணத்துப் பூச்சி!

‘ஞாலத்தின் தொன்மத்தைச் சுமந்து’ சிந்திக்க வைக்கும் வைர வரிகள். தமிழினம் இன்னும் தொன்மத்தை தொலைக்கவில்லை. சுமந்து கொண்டு தான் உள்ளது என்பதை உணர்த்தி உள்ளார்.

  தீபாவளி 27.10.2008 !

  தொலைக்காட்சியில் நகர்வலம்

  அம்மா அதிரசம் சுட்டாள்
  அக்கா வடை சுட்டாள்

  ஊரெங்கும் வெடிச் சத்தம்
  தாய்த் தமிழகம்!

  அம்மையை பௌத்தன் சுட்டான்

  அக்காவை ராணுவம் சுட்டது
  தங்கையை சிங்கள் வெறியன் சுட்டான்
  ஊரெங்கும் வெடிச்சத்தம் சேய் ஈழம்!

 அங்குமிங்கும் ஒரே சமநிலை

 நரகாசுரர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம்.

தீபாவளியன்று தமிழகம் கொண்டாட்டத்தில் இருந்த நேரத்தில் ஈழத்தில் தமழினப் படுகொலை நடந்ததை கவிதையின் மூலம் காட்சிப்படுத்தி தடுக்க முடியாது போன சோகத்தை நினைவூட்டி கவிதை வடித்துள்ளார்.அங்கும் இங்கும் கவிதையால் காட்சிப் படுத்தி உள்ளார் .

  ஈழத்தாயகத்தில்

  இன்னும் இருக்கிறார்கள்
  அமைதியின் முகவரி

  ஆனால் அங்கு மட்டும்

  ஆச்சரியம்
  புத்தம் இரத்தம் விரும்புகிறது!

உண்மை தான். எறும்பைக் கூட மிதித்து விடக் கூடாது, கூட்டி விட்டு நடக்கும் புத்த பிட்சுகள் தமிழினப் படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்து, தூண்டி விட்டது புத்தருக்குச் செய்த துரோகம் தான்.புத்தரை இவர்கள் வணங்குவதில் அர்த்தம் இல்லை .

  மனசாட்சியை

  தட்டி எழுப்பியபடி
  தமிழினத்தின் கண்ணீர்த் துளியாய்

  இலங்கைத் தீவு
  உலகின் வரைபடத்தில்!

இலங்கையை வரைபடத்தில் பார்த்த கவிஞர் ஞானபாரதிக்கு அது ஈழத்தமிழரின் சோகத்திற்காக வடிக்கப்பட்ட கண்ணீர்த்துளியாகத் தெரிகின்றது. கவிஞனின் பார்வை கற்பனை என்றாலும் அர்த்தம் உள்ள பார்வை தான். இரக்கப்பார்வை தான்.மனிதநேயப் பார்வைதான்

  முகாமிலிருந்து!

  ராணுவம் போட்ட

  குண்டுல போனது
  மாடு, கன்று, வீடு மட்டுமல்ல
  மச்சானும் அக்காளும் தான்
  தாவணி எடுத்துப் பார்த்தேன்
  சில கிழிசல்

  சில ரத்தக் கறைகள் !

  போரில்லாத பகுதி என்று அறிவித்து விட்டு அங்கு முதியவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கூட வைத்து, குண்டு போட்டு கொன்று மகிழ்ந்தது சிங்கள இராணுவம்.  இந்த நூற்றாண்டிலேயே இப்படி ஒரு படுகொலை உலகில் எங்கும் நடக்கவில்லை என்ற அளவிற்கு படுகொலைகள் புரிந்தன.

  ஆனால் இன்று வரை விசாரணை தான் நடக்கின்றது.  தண்டனை வழங்கப்படவில்லை.  ஐ.நா. மன்றமும் இழுத்துக் கொண்டே செல்கின்றது.கொலைகாரன் வலம் வருகிறான். வேதனை .

  இனம் அழிக்கும் இனிப்புப் பொங்கல்!

  போகியாய் போனது

  இல்லமும் உடைமையும்
  தமிழன் உயிரும், மானமும்

  சிங்களனுக்கு
  பொங்கலோ பொங்கல்!

  உழவைப் போற்றும் உன்னதத் திருநாளான பொங்கலை ஈழத்தமிழர்கள் ஈழத்தில் கொண்டாட முடியவில்லை.  ஆனால் இனத்தை அழித்த மகிழ்வில் சிங்களன் கொண்டாடுகிறான் பொங்கலோ பொங்கல் என்று முடித்த முடிப்பு முத்தாய்ப்பு.  படுகொலைகள் நடந்தும் மிச்சம் சொச்சம் ஈழத்தமிழர்கள் “இன்னும் இருக்கின்றேன்” என்ற சொல்வது போன்ற தலைப்பு நன்று.

  மனிதாபிமானமுள்ள யாரும் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்கு கண்டனத்தை பதிவு செய்வார்கள்.  ஆனால் ஒரு சில படைப்பாளிகள் ஈழம் பற்றி எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை, காரணம் அச்சம்.  அநீதிக்கு எதிராக எழுதுவதும், குரல் கொடுப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை உணர வேண்டும்.அநீதி கண்டு அமைதியாக இருப்பதும் குற்றமே .

  நூல் ஆசிரியர் கவிஞர் ஞானபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.  நமது சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு நடந்த துயரத்தை ஈர மனதுடன் கவிதையாக வடித்துள்ளார்.

  புத்தம் சரணம் கச்சாமி !

  தமிழர் ரத்தம் சரணம் கச்சாமியென
  சிங்களர் யுத்தம்
  நித்தம் நடத்தினரே!

‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று புத்தரை வணங்கிக் கொண்டு புத்தருக்கு பிரம்மாண்ட சிலைகளையும், கோவிலையும் கட்டிக்கொண்டு புத்தரின் ஒப்பற்ற போதனையான ‘ஆசையே அழிவுக்குக் காரணம்’ என்பதை மறந்து விட்டு பேராசை, மண்ணாசை, பொன்னாசை பிடித்து அழிந்து தமிழர்களின் ரத்தம் குடித்த கொடூரத்தை கவிதைகள் மூலம் நன்கு கண்டித்து உள்ளார், பாராட்டுக்கள்!

  யாழ்!

  புதிய ராகங்களை

  மீட்டுக் கொண்டிருக்கிறது
  நம்பிக்கையுடன்
  சுயம்புகள்

  சூல்பைகளுக்காக

  காத்திருப்பதில்லை !

  ஒரு உறையில் இரண்டு வாள்கள் வைப்பது கடினம்.  கீரியும் பாம்பும் சேர்ந்து வாழ முடியாது. இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை. ஈழத்தமிழர்கள் இதயத்தில் தனி ஈழம் என்பது நிறைவேறாத ஆசையாக கனவாக உள்ளது.  இன்று இல்லாவட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்களின் கனவு நனவாகும் என்பது மட்டும் உண்மை.

  நாளும் கொண்டாடுவோம்

  நாளையும் கொண்டாடுவோம்
  ஈழம் இருந்தாலென்ன

  இனம் அழிந்தாலென்ன
  நமக்குத் தேவை

  ஒரு திருவிழா!

  இலங்கையில் தமிழினப் படுகொலைகள் நடந்த போது அவற்றை நிறுத்தக்  கோரி பலரும் குரல் கொடுத்தனர், போராடினர். ஆனால் அந்தப் போராட்டங்கள் சிறுபான்மை மக்களால் நடத்தப்பட்டதென, பெரும்பான்மை மக்கள் திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.  ஈழப்படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவற்றை உணர்த்தும் விதமாக பல கவிதைகள் வடித்துள்ளார்.

  கோள்களின் சாபம்!

சாம்பலுக்குள் நூலகம்

மண்ணுக்குள் உடல்
மரத்துக்குள் உயிர்

காற்றுக்குள் உணர்வு
கடலுக்குள் ஓலம்

நிலவுக்குள் இரத்தம்
சூரியனுக்குள் ஊன்!
அண்டவெளியில் நெருக்கடி
ஆகாயமெங்கும் பிணநெடி !

தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிசமாக அரிய பல நூல்கள் உள்ள யாழ் நூலகத்தை சிங்கள இன வெறியர்கள் எரித்து மகிழ்ந்தனர். அந்தக் கொடிய நிகழ்வை நினைவூட்டும் விதமாக ‘சாம்பலுக்குள் நூலகம்’ என்ற சொற்களின் மூலம் உணர்த்தி உள்ளார்.

இலட்சணக்கணக்கான மக்களை தமிழர்களைக் கொன்று குவித்த காரணத்தால் ‘ஆகாயமெங்கும் பிணநெடி’ என்கிறார். நூலைப் படித்து முடித்ததும் இவ்வளவு இன்னல்கள் அடைந்த ஈழத்தமிழர்களின் வாழ்வில் விடியல் வர வேண்டும் என்ற எண்ணம் விதைத்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *