காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தி வரும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் பணியாற்றி வரும் மாணவர்கள், அக்கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். ஆனந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் இப்பயிற்சியை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்கள் தலைமைத் தாங்கி பேசுகையில், இந்திய ஒன்றிய அரசு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை குறைத்து, பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பரப்புரை செய்ய பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் தேசிய இயற்கை விவசாய உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அத்திட்டங்களின் நோக்கங்களுக்கு பொருத்தமாக, திரு. ஜகத் குரு என்பவர் குரு பஞ்சகவ்யம் என்ற இயற்கை கரைசல் ஒன்றை கண்டுபிடித்தார். அந்த குரு பஞ்சகவ்யம் பல விவசாயிகளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் பயன் அளிப்பதாக அவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன. அதனால், ஒரு லிட்டர் சுமார் 100 ரூபாய் வரை அது விற்பனை ஆகிறது. ஆனால், தற்சார்பு கருதி விவசாயிகள் தாமே பயிற்சி பெற்று அதை உற்பத்தி செய்து பயனடைய இந்தப் பயிற்சி ஒரு அரிய வாய்ப்பு என்றார்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஸ்ரீதர் மற்றும் தமிழ்மாறன் செயல்முறை விளக்கம் அளித்தனர் குரு பஞ்சகவ்யம் தயாரிக்க, 3 கிலோ நாட்டு மாட்டு சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை, 3 லிட்டர் புளிச்சக்கீரைச் சாறு அல்லது கோமியம், அரை லிட்டர் குரு பஞ்சகவ்யம் ஆகிய அனைத்தையும் சேர்த்து முதல் கலவையைத் தயாரித்து 3 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.
இரண்டாம் கலவையாக 4 கிலோ சோற்றுக் கற்றாழை மற்றும் 2 கிலோ கற்பூரவள்ளி அல்லது வெப்பாலை அல்லது எருக்கன் இலை, அரை கிலோ நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை அரைத்து, அந்த இரண்டாவது கலவையையும் 3 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.
பின்னர், இரு கலவைகளையும் 30 லிட்டர் குளோரின் இல்லாத நீருடன் சேர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து, முன்பு குரு பஞ்சகவ்யம் பயன்படுத்திய நிலத்தின் மண் ஒரு பிடி மற்றும் இரண்டரை லிட்டர் குரு பஞ்சகவ்யத்தை தாய் திரவமாக சேர்த்து, 4 அல்லது 5 நாட்கள் காலை, மாலை இடது பக்கத்தில் இருந்து வலது புறம் 60 முறை கலக்க வேண்டும்.
அவ்வாறு 7 அல்லது 8 நாட்களில் குரு பஞ்சகவ்யம் தயாராகிவிடும். கலவை மற்றும் கரைசலை துணியால் மூடி கட்டி வைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டினர். ஒரு லிட்டர் தண்ணீரில் 60 மில்லி கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
முன்னோடி விவசாயிகளான சேத்தூர் திரு. ஆறுமுகம், திரு. ஜெயராஜ், திரு. சரண்ராஜ்; பண்டாரவாடை திரு. கண்ணபிரான், திருமதி அமுதா; புதுத்துறை திரு. ரவிச்சந்திரன்; ஐயர் கொட்டப்பாடி திரு. துரைராஜ்; வளத்தமங்கலம் திரு. பேரழகன்; அகரகொண்தகை திரு. டி. சின்னதுரை, திரு. எம். சேகர்; கோட்டுச்சேரி திரு. நச்சுப்பிள்ளை; நிரவி திரு. கு. பாலகிருஷ்ணன்; தென்னங்குடி திரு. கண்ணன்; போலகம், குருவாடி திரு. செல்வம், திரு. அ. பழனிவேல்; திருப்பட்டினம் திரு. கபீர்; திருமருகல் திரு. சத்தியமூர்த்தி; தாராசுரம் திரு. லெனின் மற்றும் பல விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முக்கிய விவசாயியும் புதுச்சேரி அரசின் முன்னாள் அமைச்சருமான திரு. ஆர். கமலக்கண்ணன் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குரு பஞ்சகவ்யத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நான்காம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 15 மாணவர்கள் மற்றும் 17 மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பயிற்சியின் விவாதங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை மாணவிகள் யோகப்பிரியா, லாவண்யா, சந்தியா, அக்க்ஷதா ஆகியோர் பதிவு செய்து ஆவணமாகினர். விவசாயிகளுக்கு உதவும் விதமாக கூட்டக் குறிப்புகளை மாணவர்கள் ஆஷிஷ், ஸ்ரீராம் சாம், தண்டபாணி ஆகியோர் தயாரித்தனர்.
முன்னதாக மாணவி ஹரேப் பிரியா அனைவரையும் வரவேற்றார். மாணவர் மித்ரன் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் நன்றி உரைத்தார்.