தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23 ஆயிரத்து 747 தனித் தேர்வர்கள், 5 ஆயிரத்து 206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 90 சிறைக்கைதிகள் என ஒட்டு மொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில் மட்டும் 180 மையங்களில் 42 ஆயிரம் பேர் வரை தேர்வு எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கி 21-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. விடைத்தாள் திருத்துதல் பணியில் சுமார் 50 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மே 5-ந்தேதி வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. அதன் பின் நீட் தேர்வை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு மே 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.10 மணிக்கு வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.03 சதவீதம் ஆகும். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 மாணவிகள் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 96.38 சதவீதம் ஆகும். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது 91.45 சதவீதம் ஆகும். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்து உள்ளார். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.76 ஆகும். தமிழகத்தில் 7 ஆயிரத்து 533 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2767 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326 ஆகும். பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 308 பேரில் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.85 சதவீத தேர்ச்சியாகும். திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 24 ஆயிரத்து 732 பேரில், 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.79 சதவீத தேர்ச்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 391 பேரில் 7 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.59 சதவீத தேர்ச்சி ஆகும். இவ்வாறு அவர் கூறினார். பிளஸ்-2 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in., www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *