அலங்காநல்லூர்,

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இதையொட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பாக நேற்று ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கூறியதாவது. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்த தங்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

உச்ச உச்சநீதிமன்றத்தில் சீறிய வாதங்களை முன்வைத்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீட்டெடுக்க உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கும், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற உறுதுணையாக இருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்பவர்களுக்கும், ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *