புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும், கரைக்கால் பகுதியில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளுக்கு சாராயம் கடத்தி செல்லப்படுகிறது. புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியமான காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மற்றும் கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு விளைநிலங்கள், ஆற்றோரம் வழியாக மூட்டை கட்டி தலை சுமையாகவும் சாராயம் கடத்தப்படுகிறது. புதுவையில் இருந்து கடத்தப்படும் சாராயத்தில் கூடுதலாக போதை ஏறவும், சரக்கின் அளவை அதிகரிக்கவும், மெத்தனால் மற்றும் வேதிப் பொருட்களை கலக்கின்றனர். மேலும் ஆர்.எஸ். பவுடர் வாங்கி வந்தும் சாராயம் தயாரிக்கின்றனர். பின்னர் அந்த சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து அதற்கு ‘பாண்டி ஐஸ்’ என்று அடைமொழி வைத்து விற்பனை செய்கிறார்கள். புதுச்சேரி சாராயத்திற்கு தனி மவுசு உண்டு என்பதால் பாண்டி ஐஸ் என்று பெயர் வைத்துள்ளனர். கேனில் விற்கப்படும் சாராயத்திற்கு கோனிமுட்டி என்றும், மதுபாட்டிலில் விற்கப்படும் சாராயத்திற்கு ஷீல்டு என்றும் பெயர் வைத்துள்ளனர். சிதம்பரம், சீர்காழி பகுதியில் பாண்டி ஐஸ் பெயரிட்ட பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்டுகிறது. ரூ.30 மற்றும் ரூ.60-க்கு சாராயம் கிடைப்பதால் குடிமகன்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி குடிக்கின்றனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடை 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பே கள்ளச்சாராயம் விற்பனை மும்முரமாக நடக்கிறது. மதுபானங்களை விட விலையும் குறைவாக இருப்பதால் குடிமகன்கள் கள்ளச்சாராயத்தை நாடி செல்கின்றனர். வயல் வெளிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *