நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரத்த வங்கி கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் முதல் நபராக இரத்ததானம் செய்து ரத்த வங்கியை தொடங்கி வைத்தார்.

அதன்பின், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எர்ணாபுரம் அரசு மேம்படுத்த சுகாதார நிலையத்தில் புதிதாக வட்டார பொது சுகாதார அலகு, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமகிரிப்பேட்டை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக புறநோயாளிகள் பிரிவு மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சுடையாம்பட்டி பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

முன்னதாக அமைச்சர்கள் மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களை கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொல்லிமலையில் விபத்து ஏற்பட்டால் அல்லது கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் சிரமப்பட்டு சேந்தமங்கலம், நாமக்கல் அல்லது ராசிபுரம் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் தமிழக முதல்வர் உத்தரவின் படி கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் மூன்று இடங்களில் ரத்த வங்கி அமைக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி முதன்முதலாக இன்று கொல்லிமலையில் ரத்த வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பிரேத பரிசோதனை மையம் அமைக்கப்படும், 1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் கொல்லிமலையில் 4 செவிலியர்கள் குடியிருப்பு, 2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவர்கள் குடியிருப்பும் கட்டுவதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து விரைவில் நாமக்கல்லில் புதிதாக சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படவுள்ளது, ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் சென்னை மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.

10 நாட்களில் முதல்வருடன் டெல்லி சென்று அங்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சரை நேரில் சந்தித்து திருச்சியில் சித்த மருத்துவத்துக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட உள்ளது

தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு இரத்தம் தொடர்பான நோய் கண்டறியும், மாநில அளவிலான மாபெரும் பரிசோதனை முகாம் நாளை கொல்லிமலையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த பரிசோதனை முகாம்கள் மலைப்பிரதேச பகுதிகளில் நடத்தப்படும். இதற்காக ரூபாய் 40 கோடி மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முகாம் கொல்லிமலையில் தொடங்கி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது என்றும் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விழாவில் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *