பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவரான அம்ரித் பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை அவரது ஆதரவாளர்கள் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எங்கே தப்பி சென்றார்? என்பது தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் அவர் கடந்த 18-ந் தேதி அமிர்தசரசில் இருந்து சொகுசு காரில் அவரது சொந்த கிராமமான ஜலுப்பூர் கேராவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து சினிமா பாணியில் வெவ்வேறு கார்களுக்கு மாறியுள்ளார்.
மேலும் துப்பாக்கி முனையில் ஒருவரை மிரட்டி அவரது மோட்டார் சைக்கிளை பறித்து அதில் தப்பிச்சென்ற காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி அரியானாவுக்கு தப்பிச் சென்றதும், அங்கு பல்ஜித்கவுர் என்ற பெண்ணின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அம்ரித் பால்சிங்கிற்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜித் கவுரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அம்ரித் பால்சிங்கை தேடும் பணி இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. அவர் உத்தரகாண்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் ஒரு தனிப்படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அவர் நேபாளம் வழியாக தப்பி செல்லலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நேபாள எல்லை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை உஷார்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக நேபாள எல்லை பகுதிகளில் அம்ரித் பால்சிங்கின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டியுள்ள போலீசார் அவரை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையே அம்ரித் பால்சிங்கின் ஆதரவாளர்களான ஆனந்த்பூர் கல்சா படை (ஏ.கே.எப்.) உறுப்பினர்கள் பஞ்சாபின் ஜல்லுப்பூர் கிடா கிராமத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த வீடியோக்களில் வனப்பகுதியை போன்று இருக்கும் இடத்தில் அந்த ஏ.கே.எப். உறுப்பினர்கள் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறும் காட்சிகள் இருந்தன. அதில் ஒருவர் ஆயுதங்களுடன் உணவு அருந்திக்கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் இருந்தன. அங்கு ஏ.கே.எப். உறுப்பினர்களுடன் அம்ரித் பால்சிங் நடந்து செல்வது போன்றும் காட்சிகள் இருந்தன. இவற்றை கைப்பற்றியும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *