திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டு 5808 பயனாளிகளுக்கு 43.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களும், கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேசும்போது… மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய இடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். மக்களின் வாக்குரிமை போகக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வரும் துணை முதல்வரும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழக தொண்டரும் வீடு வீடாக சென்று மக்களின் வாக்குரிமையை மீட்டெடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக அரசுடன் இணைந்து நமக்கு வாய்த்த எதிர்க்கட்சியும் இணைந்து நம் மக்களுக்கு துரோகம் செய்வது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. அதிமுக நண்பர்களின் வாக்குரிமையும் மீட்டுத் தரப்போவது திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை அதிமுக நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தமிழ்நாட்டுக்காக செய்யக்கூடிய விஷயம், இந்தியாவுக்காக செய்யக்கூடிய விஷயம். தமிழ்நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டால் தான் இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும். பாஜகவுக்கும் தெரியும். எந்த இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களது வாக்குகளை பாதுகாக்க கூடிய ஒரே தலைவர் திராவிட நாயகன் மு க ஸ்டாலின் அவர்கள் மட்டுமே என்றார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, தாட்கோ தலைவர் இளையராஜா, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.