துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு
துறையூர் நவ-16
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30 கோடி மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து தங்களது பணத்தை மீட்டு தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காளிப்பட்டியை சேர்ந்த அப்பாதுரை (45) என்பவர் மெயின் ரோட்டில் ஓம் சக்தி டைலர்ஸ் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் 20 வருடங்களாக நிதி நிறுவனம் மற்றும் பலகார சீட்டு நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற்று வந்துள்ளார்.அதனால் அப்பாதுரையை நம்பி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரூபாய் 1லட்சம் முதல் 10 லட்சம் வரை மாதாந்திர சீட்டு, தீபாவளி பலகார சீட்டு ஆகியவற்றில் உறுப்பினராக சேர்ந்து நேரடியாகவும் ஜிபே மூலமும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
திடீரென்று ஒரு வாரத்துக்கு முன்பாக நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு மனைவி, மகனுடன் அப்பாதுரை தலைமறைவானதாக தகவல் பரவியதையடுத்து சீட்டு பணம் கட்டிய நபர்கள் 14/11/2025 அன்று காலை 9 மணியளவில் காளிப்பட்டி திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் துறையூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு துறையூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் மனு அளித்து வருகின்றனர். மகளின் கல்யாணத்திற்கும், பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும் மாதாந்திர சீட்டு கட்டியவர்கள் அழுது புலம்பியது பார்ப்போரை கண் கலங்க வைத்தது. இதுபோன்று மோசடி நிதி நிறுவனங்களில் சீட்டு பணம் கட்டி ஏமாறுவதை தவிர்க்க அரசு வங்கிகளில் சேமிப்பு செய்தால் தங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்