பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அண்மையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்ற கொடியேற்று விழாவில் மேடை சரிந்தது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதது மனநிறைவு அளிக்கிறது.

பா.ம.க. மேடைகளில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்கக்கூடாது. அதை உறுதி செய்ய மேடை ஒழுங்கை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கூட கட்சியின் நிறுவனர், தலைவர், கவுரவத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே மேடைகளில் இடம் வழங்கப்படுகிறது. மற்ற நிர்வாகிகள் பங்கேற்பாளர் பகுதியில் முதல் வரிசையில் தான் அமர வைக்கப்படுகின்றனர். இதே நடைமுறை அனைத்து நிலையிலான நிகழ்ச்சிகளிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கொடியேற்று விழா நிகழ்வுகளுக்கு மேடை அமைக்கத் தேவையில்லை. நிழலுக்காக துணிப்பந்தல் (சாமியானா) அமைத்து அதன் கீழ் தலைவர்களுக்கான இருக்கைகளும், ஒலிவாங்கியும் (மைக்) அமைத்தால் போதுமானது.

பாட்டாளி மக்கள் கட்சியின் பிற நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் வலிமையாக அமைக்கப்பட வேண்டும். மேடைகளில் இனி அதிக அளவாக 5 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

அரங்குகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் கூட, அதில் 5 இருக்கைகள் மட்டும் தான் இடம் பெற வேண்டும். அவர்களைத் தவிர வேறு எவரும் மேடைகளில் இருக்கக் கூடாது. இதை உறுதி செய்ய வேண்டியது மாவட்ட செயலாளரின் பொறுப்பு ஆகும்.

இந்த விதிக்கு மாறாக மேடைகளில் ஐந்துக்கும் கூடுதலானவர்கள் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்படும். விசாரணையில் மாவட்ட செயலாளரும், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களும் கடமை தவறியது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *