தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ஜாக்டோ–ஜியோ ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியியல் நிலைப்பாட்டை கண்டித்து கோஷமிட்டனர்.
போராட்டத்தால் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவால் பாடத்திட்டம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் முதன்மை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. பல துறைகளில் பணிகள் செயலிழந்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை (OPS) மீண்டும் அமல்படுத்துதல்.
காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மதிய உணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், நூலகர்கள், MRB செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர நியமனமும் உரிய ஊதிய உயர்வும் வழங்குதல்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய மாற்றத் தொகையை உடனடியாக வழங்குதல்.
சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வியாளர் ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட நலன்களை தாமதமின்றி வழங்குதல்.
பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர்களுக்கிடையே நிலவும் ஊதிய வேறுபாடுகளை நீக்குதல்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக மாற்றுதல்.கல்லூரி பேராசிரியர்களின் CAS பணி மேம்பாடு மற்றும் ஊக்க ஊதிய உயர்வை வழங்குதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு உயர்த்துதல்.
2002–2004 காலத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்தோரின் பணிக்காலத்தை முதல் நாள் முதல் கணக்கில் கொண்டு ஊதிய நலன்கள் வழங்குதல்.
தொடக்கக் கல்வித் துறை அரசாணை 243-ஐ ரத்து செய்தல் மற்றும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு செய்தல்.
கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என அமைப்பினர் குற்றம் சாட்டினர். மேலும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தீவிரமான போராட்டங்கள் தொடரும் என எச்சரித்தனர்.