மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் சங்கர் வரவேற்றார்.
மாவட்டப்பொருளாளர் எமிமால் ஞான செல்வி மாநில மையத்திற்கு செலுத்த வேண்டிய நிதி நிலுவைகள் குறித்து பேசினார். மாநிலசெயலாளர் கிருஷ்ணசாமி 15-வது அமைப்புத் தேர்தல் குறித்து பேசினார். மாவட்டச்செயலாளர் சீனிவாசன் கூட்டப் பொருட்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்டத் துணைத்தலைவர் பாண்டி உமாதேவி நன்றி கூறினார். மாவட்டம் முழுவதிலும் இருந்து மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 2006-ல் அமல்படுத்தப்பட்ட ஊதிய குழு ஊதிய நிர்ணயங்கள் மற்றும் 2016-ல் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழு ஊதிய நிர்ணயங்களுக்கு உரிய காலத்திற்குள் தணிக்கை மேற்கொள்ளாமல், காலம் கடந்து தணிக்கை மேற்கொள்ளும் போது, தவறான ஊதிய நிர்ணயங்கள் செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகளில் அதனை மீளப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசால் 2018-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்-286 மற்றும் மேற்கண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு ஊதிய நிர்ணய தணிக்கை தடைகளுக்கு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளையும் கருத்தில் கொள்ளாமல், கீழ்க்கண்ட இனங்களில் உரிய அரசாணைகளின் படி கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசால் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட ஊதிய நிர்ணயங்களை தணிக்கை தடைக்கு உட்படுத்துவதாக தணிக்கை துறையினர் ஆணைகளை தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பிறப்பித்து வருகின்றனர்.
- வணிகவியல் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்விற்குத் தணிக்கை தடை
- பொருளாதாரம் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்விற்குத் தணிக்கை தடை
- கணினி பட்டம் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்விற்குத் தணிக்கை தடை
4 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி.லிட்., பி.எட்., உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்விற்கான தணிக்கை தடை - ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இரட்டை பட்டம் பெற்ற நிகழ்வுகளின் உயர்கல்விக கான ஊக்க ஊதிய உயர்விற்குத் தணிக்கை தடை
- இளங்கலை பட்டம் பயிலாமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று பி.எட்., உயர் கல்விக் கான ஊக்க ஊதிய உயர்விற்குத் தணிக்கை தடை
- இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் ஊதிய நிர்ணய நிகழ்வில் தணிக்கை தடை
- பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணய நிகழ்வில் தணிக்கை தடை
- சிறப்பு படிகள் ரூபாய்.500, ரூபாய்.50, ரூபாய்.30 ஆகியவற்றிற்கான தணிக்கை தடை
- ஒத்த ஊதிய விகிதத்தில் கீழ்நிலைப் பதவியின் பணிக்காலத்தையும் மேல்நிலை பதவியின் பணி காலத்தையும் ஒருங்கிணைத்து பெற்ற தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதிய நிர்ணய நிகழ்வில் தணிக்கை தடை
- தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை /சிறப்பு நிலைக்காக தர ஊதியம் ரூ.5,400/ரூ.5700-க்கு ஊதிய நிர்ணய நிகழ்வில் தணிக்கை தடை
*மேற்கண்ட இனங்களில் ஏற்கனவே உரிய அரசாணைகளால் வழங்கப்பட்ட ஊதிய நிர்ணயங்களை காலத்தோடு தணிக்கை செய்யாமல், காலம் கடந்து தணிக்கை செய்வது மட்டுமல்லாமல் தணிக்கையின் போது கருத்தில் கொள்ள வேண்டிய அரசாணை எண்.286-ஐயும் தணிக்கை துறையினர் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றத்தால் தணிக்கை தடை நிகழ்வுகளில் ஆசிரியர்களுக்கு சாதகமாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் தமிழக அரசு மேல்முறையீட்டுக்கு எடுத்துச் செல்வதாலும் 30 ஆண்டுகளுக்கு மேல் தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் தனது ஓய்வு காலப் பணப்பலன்களை பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வயதான காலத்தில தங்களது ஓய்வு காலப் பணப்பலன்களை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடும் நிலையை உருவாக்கி தமிழ்நாடு அரசும் தொடக்கக் கல்வித் துறையும் நீதிமன்றத்தில் எண்ணற்ற வழக்குகளை சந்திக்கும் நிலையை தணிக்கைத் துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும், தணிக்கைத் துறையினரால் 2023-ல் தணிக்கை மேற்கொள்வதற்கு முன்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிலையில் தீரும் நிலை மற்றும் சிறப்பு நிலை தர ஊதியங்களாக முறையே ரூபாய்.5,400, ரூபாய்.5,700 பெற்றவர்களில் தமிழ்நாடு முழுவதும் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் எவ்வித தணிக்கைத் தடையும் இன்றி மாநிலக் கணக்காயர் அலுவலகத்தால் அனைத்து விதமான ஓய்வூதியப் பணப்பலன்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
*தவறான ஊதிய நிர்ணயங்களில் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட தொகையினை மீளப் பெறும் நிகழ்வுகளில், C மற்றும் D பிரிவு ஊழியர்களிடமிருந்து கூடுதலாக அனுமதிக்கப்பட்ட தொகையை மீளப் பெறக் கூடாது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தவறான ஊதிய நிர்ணயத்தால் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட தொகையை மீளப் பெறக் கூடாது. ஓராண்டுக்குள் ஓய்வு பெற இருக்கும் ஊழியர்களிடமிருந்து தவறான ஊதிய நிர்ணயத்தால் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட தொகையினை மீளப் பெறக் கூடாது.
தவறான ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு கூடுதல் தொகை அனுமதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிகழ்வுகளிலும் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட தொகையினை மீளப் பெறக் கூடாது என அரசாணை எண்-286-ல் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், தவறான ஊதிய நிர்ணயத்திற்கான ஆணை பிறப்பித்த சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்தே அரசு செயலர்கள், செயலக நிர்வாகத்துறை, துறைத் தலைவர்கள், அலுவலகத் தலைவர்கள் ஆகியோரால் ஆணை பிறப்பிக்கப்பட்டால் தவறான ஊதிய நிர்ணயத்தால் அனுமதிக்கப்பட்ட கூடுதல் தொகையினை மீளப் பெறலாம் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆனால், மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 286-ஐ கருத்தில் கொள்ளாமல் தணிக்கை துறையினர் தொடக்கக் கல்வித்துறை அனைத்து வகை ஆசிரியர்கள் மத்தியில் தணிக்கை தடை என்ற பெயரில் ஓய்வு பெற ஓராண்டுக்கும் குறைவாக பணிக்காலமுள்ள அனைத்து வகை ஆசிரியர்கள் மத்தியில் தொடக்கக் கல்வித்துறையில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், தணிக்கை தடை நிகழ்வில் தொடர்புடைய தணிக்கை தடை அலுவலகங்களை தணிக்கை தடைக்கு உள்ளான ஆசிரியர்கள் தனித்தனியே அணுகினால் மட்டுமே தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்யப்படுவதாக அறிகிறோம். எனவே, கடந்த ஐந்தாண்டுகளில் தணிக்கை தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்யப்பட்ட கோப்புகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தணிக்கைத் தடைக்கு உள்ளாகி பின்னர் தணிக்கை தடையில் இருந்து விலக்கு பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் உரிய பாதுகாப்பு வழங்கி ரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அவர்களது தணிக்கை தடை எவ்வாறு விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை அறியலாம். மேலும், 2018-ல் தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்.286-க்கு முழுமையான செயல் வடிவம் கொடுக்குமாயின் பெரும்பான்மை
யான தணிக்கை தடைகளிலிருந்து ஆசிரியர்கள் நீதிமன்றத்தை நாடாமல் விடுவிக்கப்படுவார்கள் என்பது சர்வ நிச்சயம்.எனவே, மேற்காண் பொருள் சார்ந்து புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசும், நிதித் துறையும், கல்வித் துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.