அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உயர்கல்வித் துறையின் சார்பில் 15.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இக்காணொளிக்காட்சி விழாவின் நேரலை ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்துகொண்டு புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்புரையாற்றினார்.
அதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் இயங்கி வந்த இக்கல்லூரிக்கென கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.15.60 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு இன்றயைதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்ததொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணாக்கர்களின் கல்வி முன்னேற்றத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அரசுப்பள்ளியில் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினையும், மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினையும் செயல்படுத்தியுள்ளார்கள். இதன் காரணமாக உயர்கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 995 ஆகும். இவற்றில் 695 மாணாக்கர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கப்பெற்று பயன்பெறுகின்றனர். அதாவது 3-ல் 2 பங்கு மாணாக்கர்கள் பயன்பெறுகிறார்கள் என்றால் நம்மை போன்ற கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் வாழுகின்ற பகுதியைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றுகின்ற பெரும் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்துகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்கள் அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும், அதன் மூலம் நல்லதொரு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். எனவே மாணாக்கர்கள் அனைவரும் நல்லமுறையில் கல்வி பயின்று வாழ்வில் சிறப்பானதொரு முன்னேற்றம் பெறவேண்டும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தலைவர் திருமதி.சுமதி சிவக்குமார், தஞ்சாவூர் மண்டல கல்விக் கல்லூரி இணை இயக்குநர் குணசேகரன், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ) முனைவர்.ம.இராசமூர்த்தி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவர் கருணாநிதி, உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், பாலமுருகன், உதவி பொறியாளர்கள் சதிஷ்குமார், கலைமதி, ஹென்றிசாம்செல்வின், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.