மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி உயர்தரமான கல்வியினை பயில வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை உள்ளிட்ட விலையில்லா உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகள் பசியில்லாமல் கல்வி கற்க ஏதுவாக காலை உணவு திட்டம், மாணாக்கர்கள் கல்வி கற்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ப கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் புதிய கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள். ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.11.84 கோடி மதிப்பீட்டில் 23,322 மாணவ, மாணவிகளுக்கும், 2022-23ஆம் ஆண்டில் ரூ.9.48 கோடி மதிப்பீட்டில் 19,666 மாணவ, மாணவிகளுக்கும்,2023-24ஆம் ஆண்டில் ரூ.9.98 கோடி மதிப்பீட்டில் 20,689 மாணவ, மாணவிகளுக்கும்.2024-25ஆம் ஆண்டில் ரூ.10.05 கோடி மதிப்பீட்டில் 20,837 மாணவ, மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 2025-26ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 105 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 30 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 11 அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 146 மேல்நிலைப்பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 9,900 மாணவர்கள் மற்றும் 10,451 மாணவிகள் என மொத்தம் 20,351 மாணவ/மாணவிகளுக்கு ரூ.9.82 கோடி மதிப்பீட்டிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாணவர்களுக்கான ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4,900 மற்றும் மாணவிகளுக்கான ஒரு மிதிவண்டியின் விலை ரூ.4,760 ஆகும்.
நிறைந்தது மனம் திட்டத்தில் பயனடைந்த மாணவி நிகிதா தெரிவிக்கையில்,
நான் திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் பழைய வண்டிப்பாளையம் பகுதியில் எனது தாயாருடன் வசித்து வருகிறேன். எனது தாய் தையல் தொழில் செய்து என்னை படிக்கவைத்து வருகிறார்.
நான் தினசரி பள்ளிக்கு ஆட்டோ அல்லது பேருந்தில் வந்து செல்கிறேன். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்போது எனக்கு அரசு மூலம் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளதால் நான் பிறரை எதிர்பார்க்காமல், எந்தவித போக்குவரத்து செலவுமின்றி பள்ளிக்கு குறித்த நேரத்தில் வந்து செல்ல பயனுள்ளதாக உள்ளது. மேலும், வீட்டிற்கு தேவையான வேலைகளை செய்ய இந்த மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனக்கு இந்த மிதிவண்டியினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.