அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. ராமேசுவரம், புனித திருத்தலமாக போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும், தங்களது முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடு செய்யவும் வருகை தருகின்றனர். தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வர தொடங்கி விட்டனர்.

இன்று காலை ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர். கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர். அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடினர். இந்த நிலையில் காலையில் திடீரென அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினார்கள். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *