திருவாரூர், திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் சேமித்து வைக்கப்படும் மாவட்ட அளவிலான மருத்து கிடங்கினை சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீர் குளம்போல் தேங்கிகிடந்துவருவதால் இப்பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மருந்து மாத்திரைகளின் தரம் கேள்விகுறியாகியுள்ளது.
இது தவிர கால்நடை மருத்துவமனைகளுக்கும் இங்கிருந்து மருந்து மாத்திரைகள் செல்லும் நிலையில் கால்நடை வளர்ப்போர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 30 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுக்கா அளவில் செயல்படும் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி அவர்களது உடல்நலத்தை பேணிபாதுகாக்க ஏதுவாக அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகளை வாங்கி அதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட மருத்து கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய மாவட்ட மருத்து கிடங்கில் இருப்புவைக்கப்பட்டுள்ள மருந்து மாத்திரைகள் முழு சுகாதாரத்துடன் பேணி பாதுகாக்கப்பட்டு பின்னர் இத்தகைய மருந்து, மாத்திரைகள் அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
முழு சுகாதாரத்துடன் பேணி பாதுகாக்க வேண்டிய இத்தகைய மருந்து கிடங்கினை சுற்றி கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதோடு, இத்தகைய மழைநீரில் கழிவுநீரும் சேர்ந்து தூற்நாற்றம் வீசி வருகிறது. மருத்து கிடங்கினை சுற்றியுள்ள இத்தகைய கழிவுநீரில் கிடக்கும் ஈ, கொசு உள்ளிட்ட நோய்தொற்று பரப்பும் உயிரினங்களால் மருத்து கிடங்கின் சுகாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.
சுகாதாரமற்ற மருத்து கிடங்கின் இத்தகைய நிலை குறித்து மருத்து கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மருத்துவ துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் மருந்து கிடங்கின் வளாகத்தில் தேங்கி கிடக்கும் மழைநீர்;, கழிவுநீரை அகற்றி சுகாதாரத்தை பேணி பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.