எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம். சேரும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். தீர்வு காணாவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலசுப்ரமணியன் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் அமைக்கப்பட்டது முதல் சுமார் 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் பொதுமக்கள் தற்போது பெய்து வரும் மழையினால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளில் புகுந்து மிகுந்த அச்சத்தை உண்டாக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி நகராட்சி அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆனால் ஆட்சியர் உத்தரவிட்டு ஓராண்டாகியும் இதுவரை இந்த நகர் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தவில்லை.
தற்போது பெய்து வரும் கனமழையினால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக கணுக்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு மோசமான நிலையால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணிக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கூறும் போது, போர்க்கால அடிப்படையில் உடனடியாக இப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.