சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனியும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது. வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமைபதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *