அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சு வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். 3-வது நீதிபதி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு தி.மு.க. அமைச்சர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு இன்று காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனையின்போது உள்ளூர் போலீசாரை அழைத்து வரவில்லை. பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையினரை உடன் அழைத்து வந்திருந்தனர். அமைச்சர் பொன்முடியின் வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் மொத்தம் 9-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீடு சைதாப்பேட்டையில் உள்ளது. இங்கு அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டார்கள். விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் திருபாணாழ்வார் தெருவில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் கீழ் தளத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்த இன்று காலை 7.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் வந்து இருந்தனர். ஆனால் அமைச்சர் வீடு பூட்டி இருந்தது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட யாரும் வீட்டில் இல்லை. வீடு பூட்டி இருந்ததால் அமைச்சரின் உதவியாளரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு வீட்டை திறக்குமாறு கூறினார்கள். ஆனால் அவர் அமைச்சர் உத்தரவு இல்லாமல் வீட்டை திறக்க முடியாது என கூறி விட்டார். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்து இருந்தனர். இந்த நிலையில் காலை 8 மணியளவில் அமைச்சர் பொன்முடியின் உறவினர் அங்கு வந்தார். அவர் வீட்டை திறந்து விட்டார். அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 10-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. கவுதமசிகாமணி எம்.பி. வெளிநாடுகளில் அன்னிய செலாவணி சட்ட விதிகளை மீறி முதலீடு செய்ததாக கூறி ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி இருந்தனர். விழுப்புரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு செம்மண் குவாரிகளில் விதிகளுக்கு முரணாக மண் அள்ளியதில் ரூ.28 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த 2 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்த சூழலில் தி.மு.க. மூத்த நிர்வாகியும், அமைச்சருமான பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் இல்லம், சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் மகன் இல்லம், விழுப்புரம் பொன்முடி இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை குறித்த தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர். சமீபத்தில்தான் 2 முக்கிய வழக்குகளில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். அமைச்சர் பொன்முடி 1996-2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த கால கட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. இதில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இதிலும் போதிய ஆதாரம் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *