பழைய ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் டிசம்பர் 21ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 03.12.2023, காலை 11.00 மணிக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆசிரியர் சங்கங்களின் மாவட்ட அமைப்பாளர் ரெ.ஈவேரா தலைமை வகித்தார். அரசு அலுவலர் சங்கங்களின் மாவட்ட அமைப்பாளர் பா.ராஜசேகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சங்கங்களின் நிதி காப்பாளர் ப.அலெக்ஸாண்டர் வரவேற்றார். இறுதியில் அரசு அலுவலர் சங்கங்களின் நிதி காப்பாளர் என்.ரெகுநாதன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.மணிகண்டன், டி.வன்னியநாதன், கோ.மோகன், ஆர்.அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு பணப்பலனை மீண்டும் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பப்பட வேண்டும்.
01.06.2009 முதல் பணியேற்று, ஏழாவது ஊதியக்குழு மூலம் மிகக் குறைவாக ஊதிய பெரும் இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய குறைபாட்டினை கலைந்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள்,ஓட்டுநர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் பிரிவினர், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறுபவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் ஓட்டுநர்களாக நியமனம் செய்யப்பட்டு, பணி புரிபவர்களுக்கு, அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதைப் போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். இந்த பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வருகிற 21.12.23 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்க கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம், தேசிய ஆசிரியர் கழகம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *