சிவந்திபுரத்தில் ஏற்கனவே ஐந்து பேரை குரங்கு கடித்த நிலையில் இன்று 13 வயது சிறுவனை குரங்கு கொடூரமாக தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி; குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் வனவர் தலைமையில் அதிரடியாக சிறப்பு குழு அமைப்பு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பாபநாசம் அடுத்த சிவந்திபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில் கடந்த வாரம் தங்கம் என்ற மூதாட்டி உள்பட மூன்று பேரை கடித்து தாக்கியது.

மேலும் கடந்த சில நாட்களில் மொத்தம் ஐந்து பேரை குரங்குகள் கடித்து அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வனத்துறையினர் கடந்த 17ம் தேதி இரண்டு குரங்குகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

இந்நிலையில் அதே பகுதியில் சிவந்திபுரம் வேதக்கோயில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முத்துராமன் (13) இன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது வெள்ளமந்தி குரங்கு ஒன்று சிறுவனை தாக்கியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிறுவர் முத்துராமன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்

ஏற்கனவே இதே சிவந்திபுரம் பகுதியில் தொடர்ச்சியாக குரங்குகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில் அப்பகுதியில் சுற்றி திரியும் அனைத்து குரங்குகளையும் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்

இந்நிலையில் சிவந்திபுரம் பகுதியில் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் இளையராஜா தெரிவித்துள்ளார்

அதன்படி வனவர் செல்வசிவா தலைமையில் வனக்காப்பாளர்கள் அஜித்குமார் உலகநாதன் வன காவலர் ஆரோக்கிய இருதயராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பொதுமக்களை கடிக்கும் குரங்குகளை அடையாளம் கண்டு அவற்றை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியினை மேற்கொள்ள இருப்பதாகவும் இப்பணி முடியும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இளையராஜா தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளார்

குரங்குகளின் தொடர் அட்டகாசத்தின் நடுவே பொதுமக்களின் அச்சத்தை உணர்ந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *