தென்கால், வண்டியூர் கண்மாய்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் ராஜன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் நீதிபதிகளிடம் கோரிக்கை மனு
மதுரை தென்கால், வண்டியூர் கண்மாய் கரைகளில் மேம்பாலம் கட்டுவதற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், இரு கண்மாய்களிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் நேரில் ஆய்வு நடத்தினர் .

மதுரை வண்டியூர், தென்கால் கண்மாய் கரைகளில் மேம்பாலம் கட்ட தடை கோரி ஆர்.மணிபாரதி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கண்மாய் கரையில் மேம்பாலம் கட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தடை விதித்தார். நீதிபதி பி.புகழேந்தி தடை விதிக்க மறுத்தார். இதையடுத்து, இந்த மனு 3-வது நீதிபதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
நீதிபதி தண்டபாணி 3-வது நீதிபதியாக மனுவை விசாரித்து, தற்போது 70 சதவீத இயற்கை வளம் அழிக்கப்பட்டுள்ளது. மிச்சம் இருக்கும் 30 சதவீத இயற்கை வளங்களை வருங்கால சந்ததியினருக்காக நாம் பாதுகாக்க வேண்டும்.
இரு கண்மாய்களிலும் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதாகவும், அதுவரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் தென்கால் கண்மாய் மற்றும் வண்டியூர் கண்மாய்களில் ஆய்வு நடத்தினர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், மனுதாரர் வழக்கறிஞர் அழகுமணி ஆகியோர் உடன் சென்றனர்.
இந்த ஆய்வின்போது. கண்மாய் கரைகள், மரங்கள் வெட்டப்பட்டது மற்றும் மாற்றுப்பாதை குறித்து நெடுஞ்சாலை. பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
மேம்பாலத்துக்காக கண்மாய் கரைகளிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு எதிராக, வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நீதிபதிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.