வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 26 ஆம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார நலமாக விளங்குகிறது.
சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் அடையும் நாளில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் வருகிற மே ஒன்னாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் இவ்ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை விழா வருகின்ற 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், குரு பெயர்ச்சிக்கு பின்னர் மீண்டும் மே மாதம் 6- ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெற உள்ளது.
லட்சார்ச்சனை காலை 9.30 மணிமுதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு7.30 மணி வரையிலும் நடைபெறும். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூபாய் 400. லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியால் ஆன 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர், ராசி ஆகிய விவரங்களுடன் தொகையினை மணியாடர் அல்லது டிமாண்ட் டிராப்ட்டாக ஆலய முகவரிக்கு அனுப்பி அஞ்சல் மூலமாக பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம். டிமான்ட் டிராப்ட் எடுப்போர் உதவி ஆணையர்- செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி( திருவாரூர் மாவட்டம்) ஆலங்குடி- 612 801 கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும். காசோலைகள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆலங்குடிக்கு கொரியர் வசதி இல்லாததால் அஞ்சல் மூலமாக விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு
https:// www.alangudiapathsagayeeswarar.hrce.tn.gov.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை அறநிலைய துணை ஆணையர், கோவில் தக்கார் ராமு, துணை ஆணையர் -கோவில் செயல் அலுவலர் சூரிய நாராயணன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.