மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி என்ற பெயரில் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் தொழிலகங்களை மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளில் நிறுவி வருகின்றன. மக்களின் உயிர் வாழும் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மக்களின் கருத்துக்களுக்கும் விருப்பத்திற்கும் மாறாகப் பெருங்கேடு விளைவிக்கும் தொழிலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவ்வகையில் தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலை என்னும் நாசகர ஆலை இயங்கி மண்ணுக்கும் மக்களுக்கும் பெருந்தீங்கு விளைவித்து வந்த நிலையில், தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து 13 உயிர்களைப் பலி கொடுத்து நாசகர ஸ்டெர்லைட் தாமிர ஆலையை இழுத்து மூட வைத்தனர். இன்று அதே தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே கழிவு மீன்களில் இருந்து மீன் எண்ணெய் கால்நடை தீவனம் முதலியவற்றை உற்பத்தி செய்யும் கழிவு மீன் தொழிலகங்கள் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் செயல்பட்டு பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வகையான தொழிலகங்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதோடு காற்றில் துர்நாற்றம் பரவி, மக்கள் பல்வேறு உடலியல் உயிரியல் சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், எல்லை நாயக்கன்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி என்.பி.எம் என்ற கழிவு மீன் தொழிலகமும், வடக்கு காரிசேரி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொட்டலூரணி விவசாய நிலப்

பகுதியில் மார்க்ஸ்மென், ஜெனிபா இண்டியா என இரு கழிவு மீன் தொழிலகமும் செயல்பட்டு வருகின்றன.
இம்மூன்று கழிவு மீன் தொழிலகங்களில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையினால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களால் வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. விவசாய நிலத்தில் வேலை பார்க்க முடியவில்லை. மேலும் தொழிலகங்களில் நச்சுக் காற்றினை தேக்கி வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் திறந்து விடுகின்றனர்.

இதனால் குழந்தைகள் முதியவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கழிவு மீன் தொழிலகங்களில் உருவாகும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிப்படைகிறது. மட்டுமல்லாமல் டேங்கர் லாரிகளில் கழிவு நீரை எடுத்து வந்து விவசாய நிலத்திலும் நீரோடையிலும் கொட்டி அப்பகுதியில் பெறும் சீர்கேட்டை உருவாக்குகிறார்கள்.

கழிவு மீன் தொழிலகங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் அதனால் ஏற்படும் பெருந் தீங்கை உணராத பொட்டலூரணி பொதுமக்கள் நாட்கள் செல்லச் செல்ல ஊரைச் சுற்றி உருவாகி வந்த நச்சு வளையத்தை உணரத் தொடங்கினர். இந்த ஆபத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கடந்த மூன்று ஆண்டு காலம் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கைகள் அனைத்தும் குப்பை கூடைக்குப் போன நிலையில் அறவழியில் போராட்டங்களை நடத்தினர். வழக்கம்போல அரசும் மாவட்ட நிர்வாகமும் மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டன.

அறவழிப் போராட்டங்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் மதிப்பளிக்கத் தவறிய நிலையில் பொட்டலூரணிப் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பணயம் வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என ஒருமித்து முடிவெடுத்தனர். தேர்தல் புறக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் முறைப்படி தெரிவித்தனர். வழக்கம்போல அரசும் அதன் அதிகாரத்தில் இருப்பவர்களும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக காரியம் சாதிக்கும் உத்தியைப் பயன்படுத்தி பொட்டலூரணி பொதுமக்களில் ஒருசிலரை மட்டும் தேர்வுசெய்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அரசு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தள்ளிப் போடுவதில் குறியாக இருந்தது. மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழுவினரோடு நடைபெறுகிற பேச்சு வார்த்தையில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற முடிவில் பொட்டலூரணி பொதுமக்கள் உறுதியாக இருந்தனர்.

அரசின் அதிகாரத்தில் இருப்பவர்களும் தொடர்ந்து மண்ணுக்கும் மக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் தொழிலகங்களுக்குச் சாதகமாக காய்களை நகர்த்துவதை புரிந்து கொண்ட பொட்டலூரணி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
எப்பாடுபட்டாவது தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முறியடிப்பதற்கு திமுக அமைச்சர் அனிதா இராதாகிருட்டிணன் தனது படை பரிவாரங்களோடு பொட்டலூரணிக்கு வந்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் உங்களோடு பேச முடியும் என்று பொதுமக்கள் வந்த வழியே அவரைத் திருப்பி வழியனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வெளியூரிலிருந்து ஆயுதம் தாங்கிய இரவுடிகள் களத்தில் இறக்கப்பட்டனர். இரவுடிகளை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

உயிர் வாழும் உரிமையை நிலைநாட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மூன்றாண்டு காலம் சமரசமின்றி தொடர்ந்து போராடி வருகிற பொட்டலூரணி பொதுமக்களின் மீது தற்போது புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்: 105/2024 இ.த.ச. 147,353, 171(C), 171 (F) IPC & 132 RP Act ஆகிய பிரிவுகளில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 40 ஆண்கள், 10 பெண்கள் மீது ஒரு வழக்கும், குற்ற எண்: 106/2024 இ.த.ச.147,341,353, 506 (i), IPC & (1) of TNPPDL Act ஆகிய பிரிவுகளில் காவல்துறையின் சொத்தை சேதப்படுத்தியதாக 50 ஆண்கள் 20 பெண்கள் மீது ஒரு வழக்கும் இரண்டு வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.


சாதி, மதம், வர்க்கம் கடந்து மனித நேயத்தோடு அறவழியில் போராடிவருகிற பொட்டலூரணி பொதுமக்கள் மீது இரண்டு பொய் வழக்குகள் புனைந்துள்ளது காவல் துறை. இதனால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று அம்மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இருந்த போதிலும் தம் உயிர் வாழும் உரிமையை நிலைநாட்ட எந்த விலையையும் கொடுப்பதற்கு அணியமாகவே அவர்கள் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பது தம் கடமையென தமிழர் கழகம், மள்ளர் பேராயம், தமிழர் வணிகர் சங்கம் உள்ளிட்ட தமிழர் அமைப்பினராகிய நாங்கள் கருதுகிறோம்.


அவ்வகையில் பொட்டலூரணி மக்களின்கோரிக்கைகளூக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *