தேனி கொடுவிலார்பட்டி, கம்மவார் சங்கம் கல்லூரியை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி.ஷ ஜீவனா உத்தரவு.

தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 190.சோழவந்தான், 197.உசிலம்பட்டி, 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம் (தனி), 200.போடிநாயக்கனூர், 201. கம்பம், ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குச்சாவடி மையங்களில் 19.04.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தேனி கொடுவிலார்பட்டி, கம்மவார் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தேனி மாவட்டத்திலுள்ள காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சுழற்சி முறையிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 24X7 என்ற முறையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணிநேரமும் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தேனி கொடுவிலார்பட்டி, கம்மவார் சங்கம் கல்லூரியைச் சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பறக்கவிட தடைசெய்யப்பட்டுள்ளது. தடையினை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *