ஒகேனக்கல்லில் நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடுமையான வெப்ப அலை தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக வற்ற தொடங்கி வருகிறது.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் திறப்பு குறைவாலும், மழை பொய்த்து போனதாலும், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 200 கனஅடி அளவில் சரிந்து வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 350 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 400 கனஅடியாக மேலும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு வரும் இந்த நீரின் அளவு குறைந்த அளவு என்பதால் ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது. எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு சுற்றுலா பயணிகள் குறைவாக தண்ணீர் கொட்டும் அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்த அளவு உள்ளதால், பரிசல் சவாரி செல்லக் கூடிய மாமரத்து கடுவு முதல் ஊட்டமலை வரை பகுதிகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் அளவும் சரிந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக பரிசலில் செல்லமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள், கடை வீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *