திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர், டிச.29- அனைத்து ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான போட்டா ஜியோ சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபாஷ், ராஜசேகர், நாகேஸ்வரன், ரஜினி, தமிழ்ச்செல்வன், மணிகண்டன், தமிழ்காவலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈவேரா, மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் செங்கேணி ஆகியோர் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 21 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குடும்பங்களுக்கான கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் 5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை மாற்றி தகுதியுள்ள அனைவருக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். தொடக்கக்கல்வித் துறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமையை அமல்படுத்தும் அரசாணை 243ஐ திரும்ப பெற வேண்டும்.
தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர பணியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்வி படித்ததற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாதத்தை பணிக்காலமாகக் கருதி ஊதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். இந்த 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாகவும் போட்டா ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் போட்டா ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்க நிர்வாகிகள் உமாசெல்வன், கிருஷ்ணமூர்த்தி, முரளி, ஜூலியஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் கார்த்திக் நன்றி கூறினார்.