புதுச்சேரி ஜிப்மரில் 150 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்து
புதுச்சேரி ஜிப்மரில் 150 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 150 படுக்கைகள் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு பணி திட்டத்தின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்காக கண்டறியப்பட்ட 12 மத்திய அரசு நிறுவனங்களில் ஜிப்மர் மருத்துவமனையும் ஒன்றாகும். அங்கு புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. அதிநவீன 150 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டப்பட்டு அது தற்போதுள்ள மருத்துவமனையுடன் இணைக்கப்பட இருக்கிறது.
கொரோனா போன்ற தொற்றுநோய் பரவும் காலங்களில் மருத்துவமனையின் பொதுவான பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனி நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வாயிலுடன் தன்னிச்சையாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்படும். இந்த பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், உயர் சிகிச்சை படுக்கைகள், தொற்றுநோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் பிரசவ அறைகள் இருக்கும். இங்கு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான நோயாளிகளும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ஆக்சிஜன் வினியோகிக்க வசதிகள், காற்று சுழற்சியை கையாளும் வசதிகள், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு வழிமுறைகள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். வழக்கமான நேரங்களில் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
தொற்றுநோய் போன்ற சூழ்நிலைகளின்போது அதை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய தன்னிச்சையான பராமரிப்பு பகுதியாக செயல்பட வேண்டி மருத்துவமனையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும். இந்த புதிய தீவிர சிகிச்சை மருத்துவமனை பகுதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் மத்திய பொதுப்பணித்துறை சிறப்பு இயக்குனர் ஜெனரல் ராஜேஷ் குமார் கவுஷல் ஆகியோர் கையெழுத்திட்டனர். கட்டடத்திற்கான விரிவான திட்டமிடுதல் சுமார் 6 மாத காலத்துக்குள் முடிந்து 24 மாதங்களில் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *