தூத்துக்குடி நகரில் சாலையின் அவலநிலை குறித்து கவனம் ஈர்க்க பாஜக பிரமுகரும், “அங்காடி தெரு” திரைப்படத்தில் நடித்த நடிகருமான காசிலிங்கம், இன்று (8.11.2025) காலை 11 மணியளவில் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய முயன்றார்.
கடந்த 9 மாதங்களாக தூத்துக்குடி விவிடி சிக்னல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை அண்ணா நகர் முக்கிய சாலை மோசமாக சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து, குழிகள் உருவாகி, வாகன ஓட்டிகளும் நடைபாதையாளர்களும் பெரிதும் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டு கொடுத்த போலீசார்!!!
சாலையில் சில மாதங்களாக போலீஸ் பேரி கார்டு வைத்து இருந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பலமுறை புகார்கள் வந்தபோதும் சாலையை சீரமைக்காததோடு, சமீபத்தில் மேற்கொண்ட பணி சரிவர செய்யப்படாததாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலைமையை எதிர்த்து, பாஜக பிரமுகர் காசிலிங்கம் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ய முனைந்தார். ஆனால் தென்பாகம் காவல்துறை போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது பொதுமக்கள் சார்பில், “மாநகராட்சி உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்களின் அவலத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது