பெரம்பலூர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களின் வீடு வீடாக வழங்கும் பணிகள் 4.11.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். கணக்கெடுப்பு படிவத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள பெயர், புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டு இருக்கும். அதன்பிறகு கோரப்பட்டிருக்கும் அனைத்து சுய விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும்.
கணக்கெடுப்பு படிவம் பெறும் வாக்காளர் இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் தனது பதிவுகளை https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று நிரப்பிடலாம்.
வாக்காளர் பெயர் முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்காவிட்டால் அவர்களது தாய், தந்தை அல்லது தாத்தா மற்றும் நெருங்கிய உறவினரின் பெயர் மற்றும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து அவரது பெயரை உறவினர் பெயராக நிரப்பிடலாம். அந்நேர்வுகளில் வாக்காளருக்கு கணக்கீடு படிவத்தினை நிரப்பிட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவார்கள்.
அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் தங்கள் வசமுள்ள 2 படிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளர் கையொப்பமிட்டு தேவைப்படின் புதிய புகைப்படத்தினை ஒட்டி வாக்குச்சாவடி நிலை வசம் திருப்பி அளித்திட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர் தங்களுக்கு வரப்பெற்ற கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பப்பட்டுள்ள விவரங்களை இப்பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்து சரிபார்த்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்புவார்கள்.
எதிர்வரும் டிசம்பர் 09 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.
இதுபோன்ற விபரங்களை வாக்காளர்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரங்கோலி, வாக்காளர் விழிப்புணர்வு ஆடியோ ஒளிபரப்பு செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் போடுதல், காலையில் வீடு வீடாக குப்பைகளை சேகரம் செய்ய செல்லும் தூய்மைப் பணியாளர்களின் வாகனங்களில் ஒலிபெருக்கியில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாது கிராமப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது,