பெரம்பலூர். நவ. 08. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதித்துறையின் சார்பில், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி , மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் தலைப்பு வெறும் தலைப்பு அல்ல, இது ஒவ்வொருவரின் ஒரு சமூகப் பொறுப்பு. சமத்துவமும் மரியாதையும் இணைந்து இயங்கும் ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். பாலின சமநிலை என்பது பெண்களுக்கான சலுகை அல்ல அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி. சமத்துவம் என்பது போராட்டம் அல்ல அது மரியாதை. பெண் என்பவள் நிழல் அல்ல அவள் ஒளி. பெண்கள்தான் ஆண்களை விட மனதளவில் வலிமை மிகுந்தவர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
கல்வி ஒன்று தான் சமுதாயத்தில் நம்மை சிறந்தவர்களாக உருவாக்கும். எனவே அனைவரும் கட்டாயம் உயர் கல்வி பயில வேண்டும்.
குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். . பெண்களுக்கான திருமண வயது 21 ஆகும். குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது மாணவ மாணவிகளாகிய உங்களிடத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனவே மாணவ மாணவிகள் உங்கள் பகுதியில் யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / சார்பு நீதிபதி சரண்யா, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி திருமதி இந்திராணி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியம்,மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கலா, மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வருவாய் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.