பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட பேரளி கிராமத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும், மகாத்மா பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் இம்மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மியாவாக்கி மரம் வளர்ப்பு முறை என்பது ஜப்பானில் யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்த முறையாகும். இடைவெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயர்.மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்க வைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச்சூழல் மேம்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்குசொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அந்த நிலங்களை மீட்டெடுத்து அங்கு மரக்கன்றுகளை நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பெரம்பலூர் மாடவட்டத்தில் மியாவாக்கி மரம் வளர்ப்பு திட்டத்தில் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்று 50ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் 15 லட்சம் பனை விதைகள் நட திட்டமிடப்பட்டு ஏற்கனவே 1லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. ஏரி, ஆறுகள், குளங்களின் கரைகளில் பனை விதைகள் தொடர்ந்து நடப்பட்டு வருகின்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர்களும் பங்கேற்கின்றார்கள். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும், புவி வெப்பமயமாதலை தவிர்க்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் வேம்பு, புளி, மகிழம், நீர் மருது, நாவல், நெல்லி, இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல்பொறியாளர் விஜயபிரியா, உதவி பொறியாளர் வானிஸ்ரீ, குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.