மதிப்பு கூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது – கலெக்டர் இளம்பகவத் தகவல்
தூத்துக்குடி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 07.04.2025 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், பாக் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அமையப்பெற்ற மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்பு மாற்று வாழ்வாதாரத் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மாற்று வாழ்வாதாரத்திட்டமானது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அக்டோபர் 2025 மாதத்தில் முதற்கட்டமாக 330 மீனவர் மற்றும் மீனவ மகளிர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம், புதியதுறைமுகம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், கீழவைப்பார், புன்னக்காயல், சிங்கித்துறை, அமலிநகர் மற்றும் பெரியதாழை ஆகிய மீனவ கிராமங்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, 150 மீனவர் மற்றும் மீனவ மகளிர்களுக்கு இரட்சண்யபுரம், வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம் ஆகிய கிராமங்களில் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
மீனவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இத்திட்டமானது புதியதுறைமுகம், புன்னக்காயல், மணப்பாடு, தருவைகுளம், திரேஸ்புரம், கொம்புத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர் மற்றும் மீனவ மகளிர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பயிற்சி பெற்ற மீனவர் மற்றும் மீனவ மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தனிநபராகவும், குழுக்களாகவும் இணைந்து மதிப்புகூட்டப்பட்ட மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கடற்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மீன்பிடி சார்ந்த பதப்படுத்தும் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் மற்றும் மீனவ மகளிர்கள் பயனடைவர் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இப்பயிற்சியின் மூலம் பயன்பெற்ற மீனவர் மற்றும் மீனவ மகளிர்கள் தங்களது மனம் நிறைந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.