“செய்தியாளர் ஜீவாசெந்தில் “
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை இணையதளத்தில் பதிவேற்றல் தொடர்பாக நடைபெறும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (புதன்கிழமை) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நவம்பர்4 ந்தேதி.முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது மற்றும் பூர்த்திசெய்வதில் சந்தேகங்கள் இருப்பின் எவ்வாறு விளக்கம் அளிப்பது, வாக்குச் சாவடி நிலை அலுவலர் தொலைபேசி எண்ணுடன் சர்வர் இணைக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு சுலபமாக கணக்கெடுப்பு பதிவத்தினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது என்பது தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கணக்கெடுப்பு படிவமும் வாக்காளரின் கையொப்பம் பெற்ற பின்னர் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யவும், வாக்காளர் வீட்டில் இல்லாதபட்சத்தில் அவரது உறவினர்களின் கையொப்பமிட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவும், 2002 வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் பெயர் இடம்பெற்றால் அதற்கான படிவத்தினையும் பூர்த்திசெய்திடவும், வாக்காளரின் பெயர் இடம்பெறாமல் இருந்தால் அவர்களின் உறவினர்கள் படிவத்தினை பூர்த்தி செய்திடவும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இப்பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார் ஆய்வின் போது, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, உதவிஆணையர் (கலால்) சண்முகவள்ளி உட்பட பலர் உள்ளனர்.