பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் க. வைத்திலிங்கம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருக்காக புதிதாக புனரமைக்கப்பட்ட அலுவலகம் அஇஅதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு அலுவலக வளாகத்தில் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் க. வைத்திலிங்கத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து (TUJ) தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட தலைவர் நிருபர் பா.வடிவேல் தலைமையில், சங்க நிர்வாகிகளான பி. சாமிநான், கே.எம். கார்மேகம், சந்திரன், கார்த்திக், சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு சால்வை அணிவித்து, பொதுப்பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த க. வைத்திலிங்கம், “ஜெயங்கொண்டம் தொகுதியை குடிசை இல்லாத பகுதியாக மாற்ற பாடுபடுவேன். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி நடுநிலையுடன் சேவை செய்வேன். குடிநீர், மின்விநியோகம், பொதுக் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்டிமடம் ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் தேன்மொழி வைத்திலிங்கம், மாவீரன் மஞ்சள் படை நிறுவனர் காடுவெட்டி குரு கனலரசன், அஇஅதிமுக மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, பாமக மாவட்ட செயலாளர் கோ. தமிழ்மறவன், மாவட்ட தலைவர் அசோகன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் மாதவன் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் பாமக, வன்னியர் சங்கம் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.