நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 45), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி அழகம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். சுரேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடினர். நேற்று அதிகாலை தலையில் பலத்த காயங்களுடன் சுரேஷ் அவரது வீட்டு முன்பு இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷுக்கும், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில், அவரது 19 வயது மகனான என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சந்துரு என்பவர் சுரேசை அடித்துக் கொன்று வீட்டு வாசலில் வீசி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து சந்துருவை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சந்துரு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் சுரேஷ் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. இது குறித்து பலமுறை எனது தாய் மற்றும் சுரேஷிடம் கண்டித்தேன். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் குடிபோதையில் எங்களது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீண்டும் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் கல்லை எடுத்து போதையில் இருந்த சுரேஷை தாக்கினேன். பின்பக்க தலையில் காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக அருகில் இருந்த மினி ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சுரேஷ் குடி போதையில் இருப்பதாக கூறி, அவரையும், அவரது டூவீலரையும் ஆட்டோவில் தூக்கிப் போட்டு, நள்ளிரவு அவரது வீட்டு முன்பு உடலையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பிச் சென்றேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதை அடுத்து சந்துருவை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *