பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது14). ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் இருந்த போது உடன் படிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தலையில் பலத்த காயம்அடைந்த தமிழ்ச் செல்வன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே மாணவர் தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். வகுப்பறையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் மற்றொரு மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் உமாமகேஸ்வரி, துணை போலீஸ்சூப்பிரண்டு கணேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வனை தாக்கி கொலை செய்த உடன் படிக்கும் அதே பகுதியைசேர்ந்த மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மரணம் உண்டாக வேண்டும் என்று எண்ணாமல் மரணத்தை விளைவிக்க கூடிய காயத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மாணவர் தமிழ்ச்செல்வன் நன்றாக படிக்க கூடிய மாணவர் ஆவார். அவரும் கைதான மாணவரும் நண்பர்கள் ஆவர். தமிழ்ச் செல்வனை கருப்பு கட்டப்பா என்று அந்த மாணவர் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்றும் கருப்பு கட்டப்பா என்று கூறியதால் கோபம் அடைந்த தமிழ்ச் செல்வன் கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் கையால் தாக்கியதில் நெற்றி அருகே பலத்த காயம் அடைந்தது தமிழ்ச்செல்வன் இறந்து போனது விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைதான மாணவரை போலீசார் திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *