கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) அன்று கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வது மற்றும் ஆற்றில் குளிக்கச்செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர் நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின்கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மழை,வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்ககூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும். பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை, இருப்பு வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறைகள் மூலம், மழைக்காலங்களில் நீர் தேங்கி நிற்பதைத் தடுக்கும் பொருட்டு அனைத்து நீர் நிலைகளிலும் தூர்வாரும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04142 – 220 700 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது.

மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம்
மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேற்படி பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள் மூலம் புகார்களை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிருவாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *