நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து இறந்தன. இதனால் உடல்களை கைப்பற்றி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. முதுமலையில் இதுவரை 27 காட்டுப்பன்றிகள் பலியான நிலையில், 06.01.23 அன்று மேலும் ஒரு காட்டுப்பன்றி இறந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய உடற்பாகங்களை வனத்துறையினர் ஆய்வக பரிசோதனைக்காக சேகரித்தனர். பின்னர் பன்றியின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்தநிலையில் வளர்ப்பு பன்றிகளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரவும், நீலகிரியில் இருந்து வெளியே கொண்டு செல்லவும் கூடாது. மீறினால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பண்ணையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இந்தநிலையில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங், கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, கால்நடை பராமரிப்பு துறையை சேர்ந்த நீலவண்ணன் ஆகியோர் தமிழக-கர்நாடகா-கேரளா எல்லைகளில் கூடலூர் பகுதியில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்பட 8 சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் கூறியதாவது:- தடுப்பு வேலிகள் முதுமலையில் 27 காட்டுப்பன்றிகள் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் உயிரழந்தன. கூடலூர் பகுதியில் 10 பண்ணைகள் உள்ளது. இதில் ஆய்வு நடத்திய போது அனைத்தும் சுகாதாரமாக வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வளர்ப்பு பன்றிகளுக்கு ஓட்டல்கள், மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய கழிவு பொருட்களை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதே போல் பண்ணைக்குள் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *