திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதி குடவாசலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ,. தொடங்கி வைத்தார்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண் புரை, கண்ணீர் அழத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட நோய்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் குழந்தைகளின் கண் நோயான பிறவி கண்ணீர் அழத்த நோய் மற்றும் மாலைக் கண் ஆகிய நோய் உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்ட மருத்துவ பயனாளிகள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.
இந்நிகழ்வில் தஞ்சை காமாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இனியன், குடவாசல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் செருகுடி ராஜேந்திரன், குடவாசல் நகர செயலாளர் சுவாமிநாதன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம்.ஜி.ஆர்.கருப்பையன் மற்றும் புதுவை அரவிந்த் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம், வலங்கைமான் ஆகிய இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட ஏரவாஞ்சேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.