கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது…

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,…
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 388 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 34 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. தெரிவித்தார்.நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 6 பயனாளிகளுக்கு ரூ.7.05 இலட்சம் மதிப்பீட்டிலான நவீன செயற்கை கால்களையும், 4 பயனாளிகளுக்கு ரூ.13,140 மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் மற்றும் 1 பயனாளிக்கு ரூ. 1.15 இலட்சம் மதிப்பீட்டிலான பேட்டரி வீல் சேர் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.8.33 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) செல்வி. யுரேகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன் ராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *