ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்லதலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்டு கோவிலாக உள்ளதால் நாட்டின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தம் கடலில் நீராடி, கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்க கடலில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் காற்று வேகமாக வீசி கடலுக்கு அடியில் நீரோட்டம் வேகமாகியதால் தாழை என்று சொல்லக்கூடிய கடற்புற்கள் அதிகளவில் கரை ஒதுங்க துவங்கி உள்ளன.
இதில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் புற்கள் அதிகளவில் கரை ஒதுங்கி வருகிறது. புனித நீராட வந்த பக்தர்கள் கடல் புற்களை கண்டதும் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் புனித நீராடாமல் சென்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. கரை ஒதுங்கும் கடல் புற்களை நகராட்சி நிர்வாம் அப்புறப்படுத்தி தரவேண்டுமாய் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்