
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் பிரித்வி இயற்கை வழி விவசாயிகளின் அறக்கட்டளையும் இணைந்து, விவசாயிகளுக்கு இயற்கை விவசாய சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து 15.11.2025 முதல் 17.11.2025 வரை மூன்று நாள் தொழிற்பயிற்சியை அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் 105 மாணவர்-மாணவியருக்கு வழங்கினர்.
இந்திய ஒன்றிய அரசு, இயற்கை விவசாய பங்கேற்பாளர் உறுதி ஏற்பு சான்றிதழ் வழங்கும் கவுன்சிலை 2012 நிறுவி, அந்த சபை வாயிலாக இயற்கை விவசாயிகளுக்கு இலவசமாக சான்றிதழ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தேசிய இயற்கை விவசாய மையமும் அதை அங்கீகரித்துள்ளது.
அந்த கவுன்சில் மற்றும் மையத்தின் ஒப்புதலுடன் பிரித்வி அறக்கட்டளை, இயற்கை விவசாயிகளுக்கு விலையில்லா சான்றிதழ் வழங்கும் சேவையை செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசின் அந்த திட்டம் பற்றி பொது மக்கள், நுகர்வோர், மாணவர்கள், மாணவியர் மற்றும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக உள்ள நிலையில், பஜன்கோவா வேளாண் கல்லூரியில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 105 மாணவர்-மாணவிகளுக்கு அந்த தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கர், தலைமை உரையாற்றி தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி, இயற்கை விவசாயம் மண் வளத்தை காப்பதால் வளர்ச்சி காண முடியும் என்றும், மேலும் சான்றிதழ் இருந்தால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் பேசுகையில், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் பங்கேற்று இந்த பயிற்சி பெற்ற மாணவர்-மாணவியரின் உதவியோடு, காரைக்காலில் உள்ள இயற்கை விவசாயிகளுக்கு பங்கேற்பாளர் உறுதி ஏற்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இயற்கை விவசாய சான்று தேவைப்படும் விவசாயிகள் கல்லூரியை அணுகலாம் என்றார்.
சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்ட பிரித்வி அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் திரு ஸ்ரீராம் பேசுகையில், காரைக்காலில் உள்ள இயற்கை விவசாயிகளுக்கும், தமிழகத்தில் செய்வது போல, இயற்கை விவசாய பங்கேற்பாளர் உறுதி ஏற்பு சான்றிதழ் விலை இல்லாமல் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கல்லூரியின் பொருளியல் இணை பேராசிரியர் டாக்டர் கே.எஸ். குமரவேல் பேசுகையில், அந்த சான்றிதழ் இருந்தால் இயற்கை விவசாயிகளின் விலை பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் நம்பிக்கை பெருகும், சந்தைமயம் ஆக்குவது எளிதாகும், அதனால் இயற்கை விவசாயிகளுக்கு லாபமே என்றார்.
மேலும், மூன்று நாள் தொழிற்பயிற்சியில் அறக்கட்டளையின் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் திருமதி உமா ஸ்ரீதர், உறுப்பினர் திரு ரங்கநாதன், தமிழகத்தின் சில முன்னோடி விவசாயிகளான திரு ஆலங்குடி பெருமாள், ஆவூர் மயில்வாகனன், மயிலை ராமலிங்கம், கும்பகோணம் பேராசிரியர் பாஸ்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விவாதங்களில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் கீர்த்திவாசன், தமிழ்மாறன் மற்றும் மாணவிகள் அஸ்வினி, ஹரேப்ரியா ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரியின் வேளாண் பொருளியல் மற்றும் விரிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி, நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். மாணவி லாவண்யா நன்றியுரை தெரிவித்தார்.