இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, 11 நவம்பர் 2025 அன்று கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) நடைபெற்றது.

ஐஜிசிஏஆர் மற்றும் ஏஐசி ஃபாஸ்ட் ஆகியவற்றின் இயக்குநர் திரு. சி. ஜி. கராட்கர் அவர்களும், ஏஐசி-பிஇசி ஃபவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் மற்றும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) டாக்டர் ஆர். சுந்தரமூர்த்தி அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில், டாக்டர் என். சுப்ரமணியன் (இயக்குநர், ஏஐசி ஃபாஸ்ட் மற்றும் தலைவர், DAE அடைகாக்கும் மையம், ஐஜிசிஏஆர்), திரு. விஷ்ணு வரதன் (முதன்மைச் செயல் அதிகாரி, ஏஐசி பிஇசிஎஃப்), டாக்டர் அனிதா டோப்போ (மூத்த அறிவியல் அதிகாரி, DAE IC-IGCAR), ஏஐசி ஃபாஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏஐசி பிஇசிஎஃப் நிர்வாகக் குழுவினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கு இந்த இரண்டு மையங்களும் இணைந்து அடைகாப்பு சேவைக்கான வாய்ப்புகளை வழங்கும். அவர்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். மேலும், தொழில்நுட்பத்திறன் மாற்றுகை இதனால் ஏதுவாக்கப்படும். IGCAR விஞ்ஞானிகளும், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குவார்கள்.

இந்நிகழ்வில் பேசிய டாக்டர் ஆர். சுந்தரமூர்த்தி, “இக்கூட்டாண்மை, எங்களின் சிறந்த ஆராய்ச்சித் திறனையும், புதிய தொழில்முனைப்பு யோசனைகளையும் சக்திவாய்ந்த முறையில் இணைக்கிறது. இதன் மூலம், ‘டீப்டெக்’ திறன்களை வலுப்படுத்தவும், இந்தப் பகுதியின் கல்வி மற்றும் ஸ்டார்ட்அப் சூழலில் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் முடியும். இது எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது” என்றார்.

AIC-PECF-ன் முதன்மைச் செயல் அதிகாரி திரு. விஷ்ணு வரதன் கூறுகையில், “IGCAR உடனான இந்தக் கூட்டாண்மை, புதுச்சேரியின் ‘டீப்டெக்’ துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. எங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அணுசக்தித் துறையின் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களான தூய்மையான ஆற்றல், சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மூலப்பொருட்கள் போன்றவற்றை எளிதாக அணுகிப்பெற முடியும். அவர்களுக்குத் தேவையான இணை-அடைகாத்தல் ஆதரவு, தொழில்நுட்பப் பரிமாற்றம், சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் கிடைக்கும். இது, அவர்களின் புதுமையான கருத்தாக்கங்களையும், யோசனைகளையும் வணிக ரீதியான தயாரிப்புகளாக மிக வேகமாக மாற்ற உதவும்” என்றார்.

இந்தக் கூட்டாண்மை, ‘டீப்டெக்’ போன்ற முக்கியத் துறைகளில் நடக்கும் ஆராய்ச்சிகளையும், புதிய தொழில் வளர்ச்சியையும் இணைக்க உதவும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையைக் குறிக்கிறது. இதன் மூலம்: ஆய்வக கண்டுபிடிப்புகளை வேகமாகச் சந்தைக்கு வர்த்தக ரீதியில் எடுத்துச்செல்ல முடியும்; புதிய திறமைகள் வளர்ச்சியடைவதற்கும் மற்றும் இந்தியாவின் தற்சார்புக்கும், நிலையான வளர்ச்சிக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள் உருவாவதற்கு இது வழிவகுக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *